Sunday, August 17, 2008

புதுப்பட்டிணம் கலவரம் - ஒரு ரிப்போர்ட்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிடைத்த 3 நாள் விடுப்பில் என் ஊரான மயிலாடுதுறை சென்று விட்டு இன்று சென்னை திரும்பி கொண்டிருந்தேன்.புதுச்சேரி - சென்னை ECR பேரூந்து புதுப்பட்டிணம் என்ற ஊரை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது மதியம் மணி 3.00.

வழியெங்கும் டாடா சுமோக்களிலும்,கார்களிலுமாக நிறைய விடுதலை சிறுத்தை அமைப்பினர் கோஷமிட்ட படி சென்று கொண்டிருந்தனர்.இன்று ஏதோ பொதுக்கூட்டம் போலும்.புதுப்பட்டிணம் பகுதியை நெருங்கிய பொழுது பேரூந்துகள் கார்கள் ஓரங்கட்டப்பட்டன.விசாரித்ததில் பொதுக்கூட்டம் செனற குழுவினரில் சிலர் புதுப்பட்டிணம் கடையொன்றில் உணவருந்தி விட்டு பணம் தராததால் வந்த சிறிய சண்டை பெரிய அளவில் பிரச்சினையாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.சற்று நேரத்திற்கெல்லாம் உருட்டுக் கட்டைகளுடன் ஒரு கும்பல் எங்கள் பேரூந்தை சூழ்ந்து கொண்டு சராமரியாக தாக்கியது.
நான் அமர்ந்திருந்த சன்னலோரம் ஒருவன் கருவேலஞ்சிம்பை எடுத்து வந்து தாக்கினான்.அனைவரும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.பேரூந்தில் இருந்தவர்கள் ஷட்டர்களை இழுத்து மூடிக்கொண்டனர்.ஓட்டுனர் செய்வதறியாது முன்னும் பின்னுமாக நகர்த்தி ஒரு சுவரோரம் கொண்டு பேரூந்தை நிறுத்திவிட்டார்.

மேலும் வெறி கொண்ட அந்த கும்பல் பின்னால் வந்த கார்களை நிறுத்தி மிக மூர்க்கமாக தாக்கினர்.எடுத்த எடுப்பில் கண்ணாடியை உடைத்தனர்.அவர்களிலேயே சிலர் தாக்கியவர்களை தடுத்து கொண்டிருந்தனர்.சில நொடிகளுக்காகவே புதுப்பட்டிண கிராம மக்கள் அவர்களை துரத்தி வந்தனர்.அவர்களை கண்டு கட்சியினர் தத்தமது வாகனங்களை நிறுத்தி விட்டு ஓடினர்.கிராமத்தினர் அவர்கள் வாகனங்களை உடைத்து நொறுக்கினர்.மேலும் கட்சி காரர் ஒருவருக்கு அறுவாள் வெட்டு விழுந்தது.கிட்டத்தட்ட சினிமா போல கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருந்த இச்சம்வங்களை பேரூந்தில் நின்று கொண்டு கண்ணாடி வழியே செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தோம்.

புதுப்பட்டிணம் கிராமத்தினர் பேரூந்துகளையோ கார்களையோ பொதுமக்களையோ எவ்வித தொந்தரவும் செய்யவில்லை.கட்சியினர் தூரத்தில் ஓடிச்சென்று நின்று கொள்வதும்வருகின்றவர்களை கண்ணில் படுகின்றவர்களை தாக்குவதுமாக இருந்தனர்.பெரும்பாலோனோர் சண்டைகளில் ஈடுபட்ட விதம் தமிழ் சினிமா எப்படி கற்று கொடுத்திருக்கிறதோ அதை வெளிக்காட்டுவதாக இருந்தது.நான் வந்த பேரூந்து அப்பகுதியை விட்டு கல்பாக்கம் செல்லும் வழியாக உள்ளே சுற்றி வெளியே வர ஒரு மணி நேரமானது.அதுவரையிலும் அப்பகுதியில் பெரிய போலீஸ் படை எதுவும் வரவில்லை.மேலும் வழியெங்கும் புதுவை செல்லும் பேரூந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.தாக்குதலுக்குள்ளான கார்கள் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

இன்று போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.பாண்டிசேரியிலிருந்து விடுமுறை முடிந்து செனை கிளம்பும் எத்தனையோ பேர் அவதியுறுவர்.நான் இதை இங்கே எழுதியதன் நோக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சியை விமர்சிப்பதல்ல.உடைக்கப்பட்ட ஒரு காருக்குள் கைக்குழந்தையை சுமந்தபடி ஒரு நடுத்தர மனிதர் அமர்ந்திருந்தார்.அக்காட்சி மிகுந்த மன உளைச்சலை தந்து விட்டது.

அரசியலின் பெயரால் இங்கே நடந்து கொண்டிருக்கும் கலாட்டக்களில் ஒரு தனிமனிதனின் பத்திரமின்மையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.அறைக்கு வந்த பிறகு சுதந்திர தினம் என ஒருமுறை சொல்லிப்பார்த்து கொண்டேன்.

2 comments:

ஜோசப் பால்ராஜ் said...

கிராமத்து மக்கள் செய்ததுதான் சரி என்று சொல்வேன். நீங்கள் வேண்டுமாணால் பாருங்கள், கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது, ஆனால் கிராமத்து மக்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும். இப்படி பொது இடங்களில் கட்சிகாரர்கள் கலவரங்கள் செய்தால் கட்சியையே கலைக்க வேண்டும் என்ற சட்டம் தேவை. இங்குதான் கட்சிகாரர்களின் கலவரத்தால் பொது சொத்துக்கள் சேதமடைந்தால் கட்சியிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க என இருந்த சட்டத்தையே ரத்து செய்து, வன்முறையை கட்சிகளின் பிறப்புரிமையாக்கிவிட்டார்களே? இவர்களை வைத்துக்கொண்டு எங்கே புதிதாய் சட்டம் போடுவது?

KARTHIK said...

வருத்தப்படவேண்டிய விசையம்.