கேளடி கண்மணி படத்தில் வரும் கற்பூர பொம்மையொன்று பாடலை எப்பொழுதும் இரண்டு வரிகளுக்கு மேல் என்னால் பாட முடிந்ததில்லை.சட்டென்று குரல் உடைந்து விடும்.இந்த படத்தையும் இனி என்னால் ஒரு போதும் பார்க்க முடியாது என நினைக்கிறேன்.
ரோமன் போலன்ஸ்கியின் oliver twist க்குப் பிறகு நான் பார்த்த மிகச்சிறந்த மெலோடிராமா படம் இதுதான்.கதை அமெரிக்க கிராமமொன்றில் நிகழ்கிறது.செக்கோஸ்லோவியாவைச் சேர்ந்த செல்மா தன் மகனது கண் அறுவை சிகிச்சைக்காகவும் அதற்க்கான பணம் திரட்ட வேண்டியும் தன் மகன் ஜீனோடு அமெரிக்காவில் குடியேறி வசிக்கிறாள்.சிறிய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கிறாள்.தின சம்பளத்தை சேமிக்கிறாள்.
தனது வீட்டின் உரிமையாளன் தன் மனைவியின் ஊதாரித்தனமான செலவினால் தான் கடன் காரன் ஆகிவிட்டதாகவும்,விரைவில் தன் சொத்துக்கள் பறிபோய்விடும் என்றும் கூறுகிறான்.செல்மா அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.மேலும் பரம்பரையாக தொடரும் நோயினால் தான் பார்வை இழந்து கொண்டு வருவதாகவும் விரைவில் முற்றிலும் தனக்கு பார்வை இல்லாது போய்விடுமென்றும் கூறுகிறாள்.இந்நோயிலிருந்து தன் மகனை காக்கவே தான் இரவு பகல் பாராது உழைப்பதாகக் கூறுகிறாள்.
மேலும் இதுவரை பகிர்ந்து கொள்ளப்பட்ட ரகசியங்களை வெளியே கூறுவதில்லையென இருவரும் சத்யம் செய்து கொள்கின்றனர்.செல்மா தினசரி வாழ்வில் நிகழும் இரைச்சல்களில் இசையை கண்டறிகிறாள்.கடந்து போகும் ரயிலோசை,இயந்திரங்கள் எழுப்பும் சப்தம் யாவும் இசைதான் செல்மாவுக்கு.மேலும் பகற்கனவுகளில் மூழ்கி பாடல் பாடுபவளாகவும் இருக்கிறாள்.செல்மாவுக்கு மெல்ல மெல்ல பார்வை முற்றிலுமாக போய்விடுகிறது.இக்குறைபாட்டினால் ஏற்படும் விபத்துக்கள் அவளை வேலையிலிருந்து துரத்துகிறது.தனது இறுதி நாள் சம்பளத்தோடு வரும் செல்மா தனது சேமிப்பு பெட்டியை எடுக்கிறாள்.அதில் பணம் இல்லாதது கண்டு தனது வீட்டின் உரிமையாளரும் நண்பருமான பில் ஐ தேடிப்போகிறாள்.
பில் குற்ற உணர்வோடு அமர்ந்திருக்கிறான்.செல்மா தன் பணத்தை தந்து விடுமாறு வேண்டுகிறாள்.பில் பிறகு தருவதாகக் கூறுகிறான்.தன் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இன்று பணம் தர வேண்டும்.இனியும் தாமதிக்க முடியாது எனக் கூறுகிறாள்.பில் துப்பாக்கி முனையில் அவளை மிரட்டுகிறான்.எதிர்பாராத விதமாக பில் காயமுறுகிறான்.மேலும் பார்க்க முடியாத செல்மாவிடம்.தன்னை முழுவதுமாக கொன்றுவிட்டு பணத்தை எடுத்துச் செல்லும் படி கூறுகிறான்.வேறு வழி இல்லாது செல்மா அவனது விருப்பத்தின் பேரில் அவனைக் கொல்கிறாள்.பிறகு பணத்தை தன் மகனுக்கான அறுவை சிகிச்சை தொகையாக மருத்துவமனையில் கட்டுகிறாள்.வழக்கு நீதி மன்றம் வருகிறது.ஏன் கொலை செய்தாய் என்ற கேள்விக்கு அதை கூற முடியாது.சத்யம் செய்து கொண்டுள்ளோம் என அவள் கூறும் பதில் அவளுக்கு மரண தண்டனை வழங்குகிறது.மரண தண்டனை விதிக்கப் படும் நேரத்திலும் பகற்கனவு கானும் அவளது கள்ளமற்ற பாத்திரம் நம்மை தீராத ஒரு கழிவிரக்கத்திற்குள் தள்ளுகிறது.
படத்தில் இடம் பெறும் பாடல்கள் கனவு காட்சிகள் கதையை ஒட்டி அமைக்கப் பட்டுள்ளன.கனவுகள் தரும் ஆசுவாசமும் அது முடியும் வேலையில் ஏற்படும் நிகழ் குறித்த துக்கமும் ஒருங்கே நம்மை சாய்க்கிறது.
செல்மாவாக நடித்திருக்கும் Bjork நடித்திருக்கிறாரா அல்லது அவரது இயல்பே அது தானா என்பது போல் இருக்கிறது.சிறிய கண் அசைவில் அலட்டிக் கொள்ளாது கண்களில் நீர் வர வைக்கிறார்.2000-ல் வெளியாகி ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் Lors von Trier என்பவரால் இயக்கப்பட்டுள்ளது.இறுதி காட்சிகள் நம்மை நிசப்தத்திற்குள் வீசியெறிந்து விடுகின்றன.மறக்கவியல்லாத படம்.
4 comments:
இப்படத்தின் விமர்சனத்தை முன்பு எங்கோபடித்த நினைவு.
இந்த முறை வாங்கிவிடுகிறேன்
வருகைகு நன்றி கார்த்திக்..வாங்கி பாருங்கள்...
/கற்பூர பொம்மையொன்று பாடலை எப்பொழுதும் இரண்டு வரிகளுக்கு மேல் என்னால் பாட முடிந்ததில்லை/
அட இந்த பாடல் இங்கயும் படுத்துதா பாட்டு வந்த புதிசில கேட்டப்ப லேசா துக்கம் தொண்டைய அடைக்கும் :) இப்ப கேட்டாலும் என்னவோ பண்ணும் இந்த பாட்டு ..
போலன்ஸ்கியின் திரைப்படங்கள் தரக்கூடிய அழுத்தம் மிக அதிகமானதுதான் குறிப்பாய் இந்தத் திரைப்படம்...
வாங்க அய்யனார்....
Post a Comment