Sunday, August 17, 2008

மீனாய் சமைந்தவன்...

துயிலொரு பெருங்கனவான
பின்னிரவில் பற்றியெரியுமென்
குகையறைச் சுவரில் வழியும்
குமிழிரவை விழி பொருத்தி
நிலங்குளிர மழையருள
பிரார்த்தித்தேனவளை...

தடாகம் விட்டெழுந்தாள்
தவங்கலைந்த பெருந்தேவி
நதி சூழ்ந்த என் வீதி வழி
பவனி வந்தாள் யாழதிர
தன் கமல ஓடத்திலமர்ந்து...

தழலிருகும் குருதியின்
நினவாடை நுகர்ந்து
விரகம் கொடிதென முனுமுனுத்தாள்...

பெய்யென்றாள்
பெய்தமழை குகையறையுள்
குளம் வளர்த்தாள்
நீர்வெளிக்குள் மூழ்கியவள்
முகமுரசி அகங்கெடுத்தாள்...

இருளாய் இருக்கிறதென்றேன்
இருவிழியில் அகல் சுடர்ந்தாள்...

கரமொன்றை நீட்டியவள்
வாவென்றாள் வசமிழந்தேன்...

வரமென்ன வேண்டுமென்றாள்
ஒளியுதட்டில் முத்தமென்றேன்...

இதழ்கடையில் சினந்துடிக்க
பெருந்தேவி நானென்றாள்
இருந்துவிட்டுப் போயென்றேன்...

முடிவாய் சொல்லென்றாள்
முத்தம் முத்தமென்றேன்...
மீனாய் கடவ என சபித்து மறைந்துவிட்டாள்...

1 comment:

anujanya said...

நன்று. பெருந்தேவி ஒரு நாள் மீன் உண்ணுகையில் அவள் உதடுகளைத் தொடலாம். மொழி ஆளுமை ரசித்தேன்.

அனுஜன்யா