Sunday, October 5, 2008

அசை...

பலி பீடத்தின் மீது படிந்திருந்த ரத்தக்கறைகள் துடைத்து அகற்றப்பட்டன.ஆரவாரங்கொண்ட வீதியதில் கைகளிரண்டும் பின்னே பிணைக்கப்பட்டவன் மருண்ட விழிகளூடே தள்ளாடி நடந்தான்.
நெட்டித் தள்ளும் தலைமை காவலாளியை கருணையின் சிறு துரும்பும் தீண்டாதவனாய் உணர்ந்தான்.வீதியெங்குமாய் நிறைந்திருந்த நிர்வாணிகள் அவனை மஞ்சள் மலர் தூவி வரவேற்றனர்.
அவனைச்சுற்றி தலையற்ற முண்டங்கள்/தலையற்ற மனித ரூபங்கள்.அவன் அக்கூட்டத்தில் தன் போல் தலையுள்ள ஒருவராவது உண்டா எனத் தேடினான்.பலி பீடம் மிளிர்ந்தது.அதனருகில் பளபளக்கும் ஒரு பட்டாக்கத்தியோடு ஒரு முண்டம் நின்றது.
குருதி வீச்சம் நிறைந்திருந்த அச்சூழலில் அடிவயிற்றிலிருந்து பீறிட்டு வந்தவற்றை வாந்தி எடுத்தான்.முண்டங்கள் சில ஓடி வந்து அவற்றை கைகளில் ஏந்திக் கொண்டன.அவன் பலி பீடத்தை பார்த்தான்.அதன் முன்பாக வெட்டப்பட்டிருந்த பெருங்குழியிலிருந்து தலையொன்று துள்ளி மீண்டும் குழிக்குள் விழுந்தது.கூட்டம் ஆரவாரித்தது.
கீறி விட்ட வாழையிலிருந்து நீர் வடிவது போல் அவன் கண்கள் ஒழுகின.எனினும் விசும்பல்கள் ஏதுமற்று அவன் முன்னேறினான்.

பலி பீடத்தில் தலைவைத்தபின் தன்னிச்சையாய் அவன் உதடுகள் முனுமுனுத்தவை ...


பாட்டி சொன்ன கதையில்
ஏழுமலை ஏழுகடல் தாண்டி
மலையுச்சியில்
ராட்சஷனின் உயிர் சுமந்த
கிளியின் மூக்கும் சிவப்பு தானே....?

***********************************

நீயும் நானுமான
நிகழ்தகவில் இனி
ஈவு மீதி எதுமில்லை....

***********************

உனது வட்டத்தின்
மையம்,பரிதி,ஆரம்
நானென்றாய்.
இனியேனும் உனது
மையமாக நீயே இரு...

***********************

என் அன்பே...
இனி நீயேனும்
தேனீரின் இறுதி மிடறு வரை
சுவைத்து அருந்து,

எல்லா முத்ததிலும்
அழுத்தம் கொடு
வேரறுந்து விழுதலே நலம்
வெட்டப்படுதல் வலி.