Friday, January 30, 2009

வில்லுப்பாட்டு...

சில நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் நண்பனொருவன் திடீரென "வில்லு" இருக்கா என்றான்.நான் திருதிருவென விழித்து "அதெல்லாம் இல்லீங்க" என்றேன்.அவன் மேலும் விளக்கும் விதமாக "வில்லு-பாட்டுங்க"என்றான்.அப்பொழுதும் நம்ம டியூப் லைட் முனுக் முனுக் என மின்னி அணைந்துவிட்டதால் மறுபடியும் "இல்லீங்க, santhoor இருக்கு,"Music of the mountain" ஷிவ் குமார் ஷர்மா..என்றேன்.அவன் என்னைப்போலவே திருதிருவென விழித்துவிட்டு போய்விட்டான்.

யோசித்தால் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.கல்லூரி நாட்களில் வாரம் தவறாமல் குமுதம்,ஆனந்தவிகடன் வாங்கியவனா நான்.அப்பொழுது சினிமா இயக்குனர் கனவில்(நல்ல வேளை தமிழ் சினிமா பிழைத்தது என நீங்கள் முனகுவது கேட்கிறது) வேறு இருந்ததால்,சினிமா குறித்த செய்திகள் விரல் நுனியில் இருக்கும்.புதிய படப்பாடல்களை உடனுக்குடன் வாங்கி விடுவேன்.
இவையெல்லாம் தியானேஷ் எனும் நண்பர் சிற்றிதழ்களை அறிமுகம் செய்யும் வரைதான்.கல்லூரி இதழில் வெளியான என் கவிதையை படித்து தேடி வந்து நட்பு பாராட்டிய சக கல்லூரி மாணவர்.உயிர்மை முதல் பிரதியை வாசிக்கத்தந்து எப்படி இருக்கிறது எனக் கேட்டார்.நான் "தமிழில் தான் இருக்கு,ஆனா ஓரெழவும் புரியலீங்க"என்றேன்.ரமேஷ்-பிரேம்,சாரு நிவேதிதா வெல்லாம் படித்து வெலவெலத்து கிடந்தவனைப் பார்த்து பரிதாபப்பட்டு "எட்டுத்திக்கும் மதயானை,ஜே.ஜே.சில குறிப்புகள் போன்றவற்றை தந்து நமக்கு எலக்கிய அறிவு புகட்டுவதில் பெரிய சிரத்தை எடுத்துக்கொண்டார்.

என் நண்பர் அப்பொழுதே பக்குவப்பட்டவராக இருந்திருக்கிறார் என இப்பொழுது புரிகிறது.ஏனெனில் அவருக்கு சாரு,ஜெமோ,சுரா மூவரையும் ஒருங்கே பிடித்திருந்தது.கடைசியாக தொலை பேசிய போது கொற்றவை எப்படி என்றேன்.வாசிக்கலே என்றார்.நான் ஆச்சர்யமாக ஏன் என்றேன்.இவ்வளவு நாள் வெளியே தான் பேசினார்,இப்போல்லாம் உள்ளேயும் பேச ஆரம்பிச்சுட்டார் என்றார்.இந்த மாதிரி விஷயத்தில் நம்ம டியூப் லைட் பக்கென்று பிடித்து கொள்வதால் பிறகெதுவும் கேட்கவில்லை.

வில்லுவை மறந்து விட்டோம்.சினிமா பாடல்கள் தவிர்த்து இளையராஜாவின் "How to name it,Nothing but wind,மற்றும் Back street boys போன்ற ஆல்பங்களையே கேட்டிருந்த எனக்கு 2004 ஆம் ஆண்டு திருச்சியில்(இங்கே தான் பொறியியல் படித்தேன்) நிகழ்ந்த சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் சத்சங்கம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.அதற்கு முன் ஓஷோவை தவிர்த்து வேறு எந்த ஆன்மீக ஆளுமைகளுடனும் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை.

ஒஷோவை வாசிக்க நேர்ந்ததே ஆச்சர்யம் தான்.ஏதோ புத்தகம் வாங்க சென்று,அட்டைப்படத்திலிருந்த ஒஷோவைப் பார்த்து வசீகரமாய் இருக்கிறாரே என (பள்ளி இறுதி அல்லது கல்லூரி முதல் ஆண்டு) வாங்கிய முதல் புத்தகம் "வெற்றுப்படகு".அதற்கு முன் ஒஷோவையும் தெரியாது.
விடுதி நண்பரொருவர் அழைக்கவே ஜகியின் அந்த சத்சங்கத்திற்கு சென்றோம்.வழியெல்லாம் சாரை சாரையாக மக்கள் கூட்டம் வேறு.ஏதோ திருவிழா என நினைத்தபடி சென்ற எனக்கு ஆச்சர்யம்.எல்லோரும் வந்தது அந்த சத்சங்கத்திற்குத்தான்.ஜகி முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்."எத்தனை பேருக்கு ஆங்கிலத்தில் பேசுவது பரவாயில்லை" என்ற கேள்விக்கு பெரும்பாலோனர் அமைதி காக்கவே சிரித்தபடி தமிழில் பேசத்தொடங்கினார்.

சத்சங்கம் முடிவுறும் சமயத்தில் சிறிது நேரம் கூட்டு தியானம் என்றார்.கண் மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தோம்.சில நிமிடங்களுக்கெல்லாம் அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் ஒரு சிறிய சலனம் கூட அற்று அமைதியான ஒரு சூழல் உருவாகியிருந்தது.திடுமென ஒலிக்கத்தொடங்கின மேடையிலிருந்த பெரிய பெரிய தோல் வாத்தியக் கருவிகள்.இசை வெள்ளம் என்ற சொற்றொடருக்கெல்லாம் அர்த்தம் அறிந்தது அன்று தான்.(தியான அனுபவங்களை வெளியே பீற்றிக் கொள்ளக்கூடாது என ஒரு விதி இருக்கிறது,எனினும் ஒன்றே ஒன்று) அந்த இசையின் அதிர்வுகளும்,தியான நிலையும் சேர்ந்து நான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து சட்டென மேலெழும்பி பறப்பதாக நிச்சயமாக உணர்ந்தேன்.(உடலின் பறக்கும் நிலை,அதன் கூறுகள்,Spiritual body,Cosmic body என விலாவாரியாக ஒஷோவின் ஒரு ஆன்மிக ரகசியம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.)

அந்த சத்சங்கம் முடிந்து வெளியே வந்த பொழுது நான் என் விடுதி நண்பரை பிராண்டி, "சார்,உங்களுக்கு தியானம் பண்ணும் போது பறக்குற மாதிரி ஏதாவது..." என இழுத்தேன்.அவர் என்னை ஒரு மாதிரியாக பார்க்கவே அத்துடன் விட்டு விட்டேன்.

பிறகு வேலை நிமித்தம் விழுப்புரத்தில் ஒரு நான்கு மாதம் தங்க நேர்ந்த சமயத்தில் ஏதேச்சையாக அங்கு நிகழ்ந்த ISHA யோக வகுப்பில் கலந்து கொண்டேன்.அதன் பிறகு எல்லாம் மாறிவிட்டது.வாசிப்பது,எழுதுவது என யாவும் பெரிய பிடிப்பொன்றும் அற்று நின்று போனது.2007 மற்றும் 2008 மிகவும் சோதனையான ஆண்டாக இருந்தது.மஹாராஷ்டிரா,ஒரிஸா என மூன்று வருடங்கள் சுற்றி பிறகு பிடிக்காமல் வேலையை விட்டு விட்டு ஆறுமாதங்கள் வீட்டிலிருந்தேன்.பொழுது போகாமல் இணையத்தில் மேய்ந்த பொழுது blog சமாச்சாரங்கள் கண்ணில் பட்டது.ஒஷோ என கூகிளியதில் கண்ணில் பட்டது அய்யனாரின் வலைதளம்.இவ்வாறாக ஓஷோ நம்மை தொடர்ந்து புதிய அனுபவங்களுக்கு எடுத்துச்செல்கிறார்.2008 மார்ச்சில் சென்னையில் வேலையில் மீண்டும் சேர்ந்து ஒரு வருடம் ஆகப் போகிறது.

2009 ல் புதிதாக யாவற்றையும் தொடங்குவோம் என செய்த முதல் காரியம் புத்தக சந்தை சென்றதுதான்.இடையில் நிறைய உலக படங்கள் பார்த்திருக்கிறேன்.கைவசம் நிறைய புத்தகங்களும்,எக்கச்சக்கமாக படங்களும் இருக்கின்றன.யார் என்ன எனத் தெரியாமலேயே உரிமையோடு நட்பு பாராட்டும் அனுஜன்யா,கார்த்திக்,உமா,தமிழன் இன்னும் புதிய நண்பர்கள் இவர்கள் எல்லோரையும் சந்திக்கும் பாலமாக அய்யனார் என அலாதியாக இருக்கிறது இந்த அனுபவம்.நன்றி அய்யனார்...

கடைசி வரை வில்லுவைப் பற்றி பேசாமல் விட்டாயிற்று.தொலைக்காட்சியோ,பேரூந்து பயணங்களோ இல்லாத office to room,Room to office என்ற சென்னை வாழ்வில் எங்கே சென்று "வில்லு" பாட்டெல்லாம் கேட்க.கையிருப்பெல்லாம் தனியறையும்,மடிகணிணியும்,இணையமும் தான்.சாருவின் கலகம்,காதல்,இசை படித்து, இணையத்தில் Nancy Ajram பாடல்களை தரவிறக்கினேன்.அதையும் இன்னும் கேட்க கூடவில்லை.ஏன் இதையெல்லாம் எழுதுகிறேன் எனத் தெரியவில்லை.குறைந்தது என்னையாவது திரும்ப பார்த்துக் கொள்ள முடிகிறது.
**முதல் மொக்கை என்பதால் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டீர்கள் என நம்புகிறேன் : )

Friday, January 16, 2009

எனினும் புலரும் பொழுது....

நிறை பரிதியுலா நிசியில்
இரை தேடுமோர் சர்பம்
சருகிடை நெளிந்தூர்கிறது...

பராபரக் காதலனின்
தியான நிஷ்டையில்
ஆடிக்களைத்த ரம்பா
ஆடை மாற்றிக்கொண்டிருந்தாள்...

கன்னியில் சிக்குண்ட
நாரை ரெண்டை
வளைக்குள்ளிருந்து
வேவு பார்க்கிறது
வயல் நண்டு...

இறுகப் புணரும்
கிணற்றுத்தவளைகளை
குறும்பாய் எட்டிப்பார்த்தவள்
களுக்கென அவை ஆழம் புகவே
அலையலையாய் சிரிக்கிறாள்...

ஏதோ அவசரமாய் சொல்ல
அரைவேக்காட்டில் எழுந்தவனை
மடாரென விறகால் அடித்து
மீண்டும் தூங்க வைத்தான்
மயானச் சித்தன்...

யாவும் கண்டு
மெல்ல உறங்குது இரவு
எப்பொழுதும் போலவே
இயல்பாய் புலர்கிறது பொழுது...

Sunday, January 11, 2009

Slumdog Millionaire....



ஒரு திரைப்படம் எத்தனை ரசவாதங்களை தன்னுள்ளே கொண்டிருக்கிறது...வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அற்புதமான படம் பார்த்திருக்கிறேன்.

Slumdog Millionaire.

20 மில்லியன் வெல்ல இன்னும் ஒரே ஒரு கேள்வியோடு காத்திருக்கிறான் ஜமால்.இதுவரை 10 மில்லியனுக்கான கேள்விகளின் சரியான விடைகளை கூறியிருக்கிறான்.மும்பையின் சேரியொன்றில் வசித்த,இளம் வயதிலேயே கலவரத்தில் கண்ணெதிரே தன் தாயை பறி கொடுத்த,தன் வாழ்வின் தருணங்களையெல்லாம் சபிக்கப்பட்டது போல் கடந்திருக்கும் ஒரு சாதாரணன் இதுவரை 10 மில்லியனுக்கான கேள்விகளின் விடைகளை அளித்திருக்கிறான்.எப்படி?

1.அவன் ஏமாற்றினான்

2.அவன் அதிர்ஷ்டக்காரன்

3.அவன் ஒரு அறிவுஜீவி

4.இது 'விதி'க்கப்பட்டது.

இன்னும் ஒரே ஒரு கேள்வி மீதமுள்ள நிலையில்,நிகழ்ச்சி நடத்தும் அனில்கபூரின் சந்தேகம் மற்றும் தன்முனைப்பால் கதாநாயகன் ஜமால் காவல்துறையினரால் ரகசியமாக விசாரிக்கப்படுவதோடு படம் தொடங்குகிறது.

ஜமாலிடம் காவல்துறையினர் கேட்பதெல்லாம் ஒரு தேனீர் விநியோகிக்கும் நபர் 10 மில்லியனுக்கான கேள்விகளின் விடையை எப்படி கூற முடியும்.?அமிதாப் நடத்திய "கோன் பனேகா க்ரோர்பதி" நிகழ்ச்சியை புனைந்து விகாஸ் ஸ்வரப் எழுதிய கேள்வி-பதில்(Q & A) நாவல் திரைக்கதையாக்கப்பட்டிருக்கிறது.

விசாரனையில் விரியும் ஜமாலின் நினைவுகளினூடாக மும்பையின் சேரி வாழ்வு விரிகிறது.இடையிடையே ஜமால் இதுவரை பதில் கூறியிருக்கும் க்ரோர்பதி நிகழ்ச்சி.திரைக்கதையாகட்டும்,மும்பை சேரியினூடாக அலைந்து விரியும் anthony dod mantley யின் ஒளிப்பதிவாகட்டும்,A.R.ரகுமானின் இசையாகட்டும்,முகத்திலறையும் காட்சியமைப்புகளாகட்டும் படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது.

இளம் பிராயத்து குற்றங்களுக்கும்,தண்டனைகளுக்கும்,வெற்றிகளுக்கும்,தோல்விகளுக்கும் பின்னே ஒளிந்திருக்கும் குரூரங்களையும்,அழகியலையும்,கண்ணீரையும் ஒருங்கே வெளிப்படுத்த முயலும் இப்படம் ஒரு கலைப்படைப்பாகியிருக்கிறது.பல காட்சிகளில் சமநிலை இழக்க நேரிடுகிறது.இதற்கு முன் பார்க்கும் பொழுதே பாடாய் படுத்திய இன்னொரு படம்"Life is Beautifull".

Sludog Millionaire இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது.ஆதலால் மேற்கொண்டு கதையை கூறி நியாயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய காண் இன்பத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

நிகழ்ச்சி நடத்துனராக அனில் கபூர் அசத்தியிருக்கிறார்.பெரும்பாலும் புதிய முகங்கள் நிறைய தென்படுகின்றன.எனினும் அனைவரிடமிருந்தும் தேர்ந்த நடிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் Danny Boyle. படத்தின் நிறைகளில் இசையை குறிப்பிட்டாக வேண்டும்.ரகுமானின் பின்னணியிசையில் முதன் முறையாக கனமான மௌனங்களை உணர்ந்தேன்.(ஒருவேளை இப்பொழுதுதான் இசையம்சங்களையெல்லாம் கவனிக்கிறேன் போலும்).

சமீபத்தில் பார்த்த "A Wednesday"(இப்படம் குறித்து தனியாக எழுத வேண்டும்) போன்ற ஹிந்தி படங்கள் இந்திய சினிமாவிற்கான உலக கதவை அகல திறந்திருக்கின்றன.தேவையில்லாத பாடல்கள்,ஜோடனைகளற்ற காட்சிகள்,புதிய கதைக்களங்கள் என இந்திய சினிமா தரமாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இணை இயக்குனராக பணியாற்றியிருக்கும் "Loveleen Tandan " மீரா நாயர் போன்றவர்களிடம் பணியாற்றியவர்.Neeraj Pandey போன்ற திறமையான இய்க்குனர்கள் வரிசையில் அறியப்படுவார் என எதிர் பார்க்கலாம்.

தவறவிடக்கூடாத படம்.

Friday, January 9, 2009

சொற்களற்ற இரவுகளில்....

வெகு நேரமாய்
இணையை துரத்துகிறதொரு
சுவர்க்கோழி....

சலனமற்று தியானிக்கிறது
அறை மூலையில்
சிலந்தியொன்று....

வெற்று சுவரில்
புலப்படுகின்றன
நடனமாடும் ஓவியங்கள்....

மின் விசிறி அலைவுகளில்
நெளியும் திரைச்சீலையிடுக்கில்
நுரைக்கிறாள் நிலா....

சட்டென மின்சாரம் அறுந்துவிடும்
தருணங்களில்
எடையற்று மிதக்கின்றன
சொல்ல ஏதுமற்றவனின் சொற்கள்....

துல்லியமாய் கேட்கிறது
தெறிக்கும் ஹீக் சப்தம்....