தீயின் நாவுகள் யுகப்பசியென குடிசையை தின்று கொண்டிருந்தது.மண்வாரிதூற்றியும் நீர் இறைத்தும் தெருவாசிகள் நெருப்பை அணைக்க முனைந்திருந்தனர்.சிவக்கொழுந்து சலனமற்று பற்றியெரியும் குடிசையை பார்த்துக்கொண்டிருந்தார்.நெருப்பு இவர் நெஞ்சில் நீரை வார்த்துக் கொண்டிருந்தது.எடை குறைவாய் உணர்ந்தார்.
சில மரணங்கள் ஆறுதலனாவை.மிக நூதனமான விடுதலையை தருபவை.காற்றெங்கும் ஊமச்சியின் “சில்லுல்லல்லோ..பில்லிலுல்லு” என்ற வசை ஒலித்தபடி இருந்தது.சொத்து பத்திற்ககாய் ஊமச்சியை திருமணம் செய்த இரண்டே வருடங்களில் ஊமச்சியை அடித்து விரட்டி விட்டு இன்னொரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்ட போது ஊர் ஒப்புக்கு ஏசியது.எனினும் பகலிலேயே பயம் கொள்ளச்செய்யும் தோற்றமும் ,கிலி கொள்ளச்செய்யும் குரலும் கொண்ட ஒரு ஊமையோடு இரண்டு வருடங்களே அதிகம் தான் என்றும் கூறிக்கொண்டது.
ஊரில் உணவு கொள்ள மறுக்கும் குழந்தகளிடம் அம்மாக்கள் கூறுவதுண்டு” ஊமச்சிக்கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்”.ஊமச்சி என் வீடு உட்பட அனைவரது வீட்டிற்குள்ளும் சரளமாக நுழைவாள்.பாத்திரங்கள் தேய்ப்பதும்,ஒரு இடுக்கின்றி வீட்டை துப்புறவு செய்யும் அவளது நேர்த்தியும்,சிக்குக்கோலங்களை அனாயசமாக இவள் இடுவதும் என் பால்யகால ஆச்சர்யங்கள்.
ஊமச்சிக்கு ஒரு கால் யானைக்கால்.அவள் அது குறித்து எவ்வித குறைவும் கொண்டதில்லை.வீங்கிய காலுடனும் சதா பிலுபிலுவென ஏதாவது உளறியபடியும் வரும் அவளது தோற்றம் ஒரு சித்திரப் படிமமாய் மன மூளையில் பதிவாகி இருக்கிறது.சிவக்கொழுந்துக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. தெருவில் எங்கேனும் சிவக்கொழுந்தை பார்க்க நேர்ந்தால் ஊமச்சிக்கு வரும் கோபம் புரிந்து கொள்ளளுக்கு அப்பாற்பட்டது.சிவக்கொழுந்து கண்டு கொள்ளாதவர் போல் கடந்து விடுவார்.”பில்லிலுல்லு கொல்லிலிபிலி” என்று அவளுக்கேயான ஒரு மொழியில் பழித்திக் கொட்டுவாள்.எனினும் பழகிப்போன விசயமாதலால் ஊர் கவனித்ததில்லை.என்றேனும் கோவில் அல்லது யார் வீட்டு திண்ணையிலேனும் சிவக்கொழுந்தின் மகள்களுக்கு இவள் சடைபிண்ணிக்கொண்டிருப்பாள்.
ஊமச்சிக்கு குடிசை கட்டி தந்தது யார் எனத் தெரியவில்லை.ஒரு தட்டு,பானை,கரண்டி,குடம் மற்றும் இரண்டு மாற்றுப் புடவைகள்,ரவிக்கைகள் தவிர வேறொன்றுமில்லாத குடிசை.அத்தை ஒருமுறை சுளுக்கு வலிக்க ஊமச்சி குடிசைக்கு அழைத்து சென்றார்.சுளுக்கு விழுந்த விரல் நரம்பை தடவியபடி சுளுக்கு எடுக்கும் அவளது லாவகம் எந்த M.B.B.S மருத்துவரிடமும் நான் கண்டதில்லை.அவள் போக்கிற்கு இடையூறு இல்லாதவரை அவளது பில்லுல்லுவை நீங்கள் கேட்க வேண்டியதில்லை.இல்லையோ பில்லுல்லுலுவோடு நறுக்கென்று கொட்டும் வாங்க வேண்டிவரும். பைத்தியம் என்ற வகைப்பாடு,அந்த சொல்லாடல் விளங்காததாகவே இருக்கிறது.ராஜாவிடம் எந்த வருடத்தின் தேதியின் கிழமையை கேட்டாலும் காகிதமோ எழுதுகோலோ இல்லாமல் சரியாக கூறுவான்.மற்ற நேரங்களில் அவன் உலகம் விநோதமானது.வெற்றிடத்தை நோக்கிய அவனது சிரிப்பும்,காற்றுடனான அவனது சம்பாஷனைகளும் விடையற்ற பல கேள்விகளை உருவாக்க கூடியவை.பறவைகள் எங்கே சென்று மரிக்கின்றன என ஒரு கவிதை வாசித்ததுண்டு.பைத்தியங்களை யார் கவனித்துக் கொள்கிறார்கள்.?அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்.அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாது போனால் எந்த மருத்துவரை அனுகுவார்கள்?
பாண்டிச்சேரியில் ஒரு சிக்னல் நிறுத்தத்தில் காத்திருக்க நேர்ந்தபோது கண்ட காட்சி என்னளவில் என் வாழ்வில் கண்ட உச்சகட்ட கொடூரம்.ஒரு கால் முழுவதும் அழுகிவிட்ட ஒரு பிச்சைக்காரன் கொளுத்தும் அந்த மதிய வெயிலில் தன் காலை பிடித்தபடி தரையில் துடித்துக் கொண்டிருந்தான்.அவனை சுற்றிலும் ஈ கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தன.மனிதன் ஏன் ஒரு சொறி நாயைப்போல சித்ரவதைப் படுகிறான்.ராஜாவை ப்ற்றி அறிந்தவர்கள் கூறுவதுண்டு இளமையில் அவன் அழகனென்றும் நிறைய வாசித்தவனென்றும்.பைத்தியமாதல் சடாரென்ற ஒரு பாய்ச்சலா? படிநிலைகள் உண்டா? புரியவில்லை.நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் எனக்கு பைத்தியம் அவ்வளவுதான்.எப்பொழுதும் தன் குறியை தடவியபடியும்,பெண்களின் போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் ஒற்றைக்காலை மடக்கி ஒற்றை காலில் நிற்கும் அவன் சிவக்கொழுந்துக்கு மற்றொரு அவமான சின்னம்.உன் தம்பி பெண்களுக்கு நேரே சிறுநீர் கழிக்கிறான் என்ற தெருவாசிகளின் குற்றச்சாட்டுகளை அவன் கண்டு கொள்வதில்லை.
ஊமச்சி கருவுற்றிருந்த போது ஊர் பேசிக் கொண்டிருந்தது.அப்பன் சிவக்கொழுந்தா?ராஜாவா? இல்லை ஊர் பொறுக்கிகளில் ஒருவனா என..ஊமச்சியின் பிரசவம் எங்கு நிகழ்ந்ததென தெரியாது.ஆனால் சில நாட்களிலேயே அந்த சிசு இறந்துவிட்டது.ஊமச்சி தலையில் அடித்துக் கொண்டது மற்றொரு மறககவியல்லாத மன பிம்பம். சிவக்கொழுந்து எங்கேனும் குடும்பத்தோடு சென்றுவிடும் நாட்களில் ராஜாவை ஊமச்சியின் குடிசையில் காணலாம்.ஒருமுறை உணவு இல்லையென கூறியதற்க்காக சிவக்கொழுந்தின் மனைவியை வன்மையாக ராஜா காயப்படுத்திய இரவில் சிவக்கொழுந்து ராஜாவையும் நிரந்தரமாக வீட்டை விட்டு விரட்டிவிட்டான்.அதன் பிறகு ராஜா ஊமச்சியின் குடிசையிலேயே தங்கலானான்.மாலை நேரங்களில் சரியாக புளியோதரை விநியோகம் செய்யப்படும் நேரத்தில் பெருமாள் கோவிலில் ஊமச்சியைக் காணலாம்.கோவிலில் மணியடிப்பவர்,கொட்டடிப்பார்,நாயனக்காரர்,தீவட்டி பிடிப்பவர்,மடப்பள்ளி அய்யர் இவர்களுக்கெல்லாம் கோவில் தவிர வேறு உலகம் இருக்குமாவென தெரியவில்லை.இளவட்டங்கள் கோவில் அருகே உள்ள பாழடைந்த வசந்த மண்டபத்தில் பாக்கெட் சாராயம் அடித்துவிட்டு புளியோதரை போஜனத்தோடு சலம்பலை தொடங்க தோதான இடம். ஊமச்சி புளியோதரையை இலையில் கட்டிக்கொண்டு குடிசைக்கு செல்வாள்.ராஜாவிற்கான இரவு உணவு அது.
ஒரு தீபாவளியென்று பட்டாசு சத்தத்தில் மிரண்ட உழவு மாடொன்று கயிறருந்து ஊமச்சியை முட்டிவிட்டது.ஊமச்சியின் கைகளிலிருந்த சதைக்கோளங்கள் பிய்ந்து எலும்பு துருத்திக் கொண்டு தெரிந்ததும் ஊமச்சியின் ஓலமும் கொடூரமாக இருந்தது.
அன்று மழை பெய்து கொண்டிருந்தது.மின்சாரமற்ற இரவும் சாரலும் உடலை கிளர்த்தியது.இருப்பு கொள்ளாது புத்தக அலமாரியை துழாவினேன்.பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் சிக்கியது.மகேஸ்வரி அக்காவின் நினைவு வந்தது.பார்க்கும் பொழுதெல்லாம் ஐந்தாம் பாகம் கேட்டு அரித்துக் கொண்டிருந்தாள்.கொஞ்சம் உதறலாக இருந்தாலும் அவளது கொஞ்சலும் குலாவலுமான பார்வையும் பேச்சும் மனதினோரம் திரையோடி கொஞ்சம் தெம்பை தந்தது.தெருவாசிகள் யாரும் கவனிக்காத பட்சத்தில்...கற்பனை ஊற குடையோடு வெளிக்கிளம்பினேன்.
மழை நிற்பதற்க்கான அறிகுறிகள் ஏதுமற்று அடர்ந்து கொண்டிருந்தது.மழைவெள்ளம் முழங்கால் வரை ஓடிக்கொண்டிருந்தது.மாணிக்கம் வீட்டை கடந்து கொண்டிருந்த பொழுது அந்த மெல்லிய ஓலம் கேட்க தொடங்கியது.மழை சப்தத்தில் துலங்காது ஈனமாக கேட்டது.மழைநீர் வரத்தை தடுக்கும் பொருட்டு எல்லா வீட்டின் கதவும் சாத்தப்பட்டிருந்தது.ஓலம் வந்த திசையை நோக்கி நகர்ந்தேன்.சுள்ளிக்காக கழித்துப் போடப்பட்டிருந்த கருவேலங்குத்துக்குள் ஊமச்சி விழுந்திருந்தாள்.உடலெங்குய்ம் கருவேல முட்கள் தாறுமாறாக கிழித்திருந்தது.டார்ச்சின் வெளிச்சத்தில் அவளை முள்ளிலிருந்து விடுவித்தேன்.பிய்ந்திருந்த அவளது தோலும்,திட்டுதிட்டாய் கசிந்த ரத்தமும்,இடுப்பில் உருத்திய பொன்னியின் செல்வனும் என்னை எனக்கு அருவருப்பாய் உணர்த்தியது. ஊமச்சியை அவளது குடிசைக்கு அழைத்துச்செல்வதில் பயனில்லை.குடிசைக்குள் மழைநீர் புகுந்திருக்கும்.அவளை கைத்தாங்கலாக பெருமாள் கோவிலின் வெளித்தாழ்வாரத்திற்கு அழைத்துச் சென்றேன்.
மருந்தும்,உணவும் எடுத்து வர வீடு திரும்பிய பொழுது நீண்ட நாட்களாக உருமிக் கொண்டிருந்த அந்த கொலை மிருகம் என்னுள் தலை தூக்கியது.ஏன் இந்த வாழ்வு?மொழிதலற்ற,இன்பமற்ற கொடூர வாழ்வு.என்ன செய்து விட முடியும்?ஓரிரு வேளை உணவளிப்பதையும்,இரண்டொரு மாற்றுத்துணிகளை தருவதைவிடவும்..ஊமச்சிக்கு வாழ்விலிருந்து விடுதலை அளிக்கும்படி உள்ளேயிருந்த கொலை மிருகம் கட்டளையும் எல்லா கொலைகளும் கொலையல்ல என்ற சமாதானத்தையும் வழங்கியபடி இருந்தது. உணவின் மீது மருந்தை ஊற்றிய பொழுது கை நடுங்கியது.கொலை கொலையென செவிப்பறை அதிர்ந்து கொண்டிருப்பதாக மனம் மருண்டது.கழுத்தை நெறித்துக் கொல்லவோ,கத்தியால் குத்தவோ திராணியற்ற மனம் என்பதால் உணவை சாக்கடையில் கொட்டிவிட்டு நல்ல உணவோடு பெருமாள் கோவிலை அடைந்தேன்.ஊமச்சி அங்கு இல்லை.யாரோ அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்று எண்ணிய பொழுது மனம் பக்கென்றது.கோவில் படிகளில் இறங்கி குளத்தை சுற்றிவந்தேன்.ஒருவேளை தவறிவிழுந்திருந்தால்..?
வீடு திரும்பி வெகுநேரம் வரை மனம் இருப்பு கொள்ளவில்லை.நிகழ்ந்து முடிந்தவை பெரும்பாரமாய் மனதை அழுத்தியது.காலை எழுந்தவுடன்,தெருவிற்க்கு விரைந்தேன்.ஏதேனும் துக்க செய்திகள் கேட்கிறதாவென.தெரு இயல்பாய் இருந்தது.அதன் பிறகு நீண்ட நாட்கள் ஊமச்சியை காணவில்லை.ராஜா மாரியம்மன் கோவிலுக்கு ஜாகை மாறியிருந்தான்.
கல்லூரி முதலாண்டு விடுமுறையில் ஊர் வந்தபோது கவனித்தேன்.சாலைகளிலோ,பேரூந்து நிலையங்களிலோ ராஜாவை காண முடியவிலை.விசாரித்ததில் நோய்வாய் பட்டிருப்பதாகக் கூறினார்கள்.“ஒரு வாழ்வுக்காலம் என்பது வெறும் நொடிகளும்,நிமிடங்களும் கொண்டதுதானா?ராஜாவின் உலகத்தை நான் பைத்தியமாதல் உணர்த்துமா?செவிகளையும் வாயையும் அடைத்துக்கொண்டால் நான் ஊமச்சியின் மனதை அறிவேனா?”
குடிசை எரிந்து முடிந்திருந்தது.ஊமச்சியையும் ராஜாவையும் கரிக்கட்டைகளாக வெளியே கொண்டு வந்து போட்டனர்.காக்கா கொத்தி(எங்க ஊர் சவ அடக்க காரியகர்த்தா) சிவக்கொழுந்திடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான்,ஊமச்சி மற்றும் ராஜாவின் சவ அடக்கத்திற்கு.
Thursday, July 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நன்றாக எழுதுகிறீர்கள். 'தமிழ்மணம்' போன்ற திரட்டிகளில் சேர்த்தால் மேலும் பலபேருக்கு உங்கள் எழுத்து அறிமுகமாகும்.
அனுஜன்யா
நன்றிங்க...இந்த பாழாப் போன settings என்னை திரட்டிகளில் சேர்த்துக்க மாட்டேங்குது...மறுபடியும் முயற்சி பண்றேன்...
அப்பா, ஒரு வழியாக தமிழ்மணம் வந்து சேர்ந்தீர்களா? ஒவ்வொரு பதிவாக போடுங்கள். All the best.
அனுஜன்யா
ஊக்கத்திற்கு நன்றி அனுஜன்யா..அடிக்கடி வருகை தாருங்கள்.பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துகளியும் பகிர்ந்து கொள்ளுங்கள்...
Post a Comment